உயிரைக்கூட துச்சமாக நினைத்து பிறருக்கு உதவும் மீனவர்கள்: கனிமொழி உருக்கம்!
உயிரைத் துச்சமென நினைத்து, மழை வெள்ளத்தில் அனைவரையும் காப்பாற்ற வந்தவர்கள் மீனவர்கள் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கனிமொழி உருக்கமாக பேசினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தனக்கு ஆதரவாக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புன்னக்காயல் ஊராட்சியில் பொதுமக்களிடம் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி, “உங்களுக்காக தொடர்ந்து பணியாற்ற எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்க உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். மழை வெள்ள காலத்தில் உங்கள் உயிரைப் பணயம் வைத்து அனைத்து மக்களையும் காப்பாற்றுவதற்கு, உயிரைக்கூட துச்சமாக நினைத்து படகுகளை எடுத்து வந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களை காப்பற்றியவர்கள் நீங்கள், அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மீனவ மக்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டு கொண்டிருக்கிற பாஜகவை வீட்டுக் அனுப்ப வேண்டிய தேர்தல் இது என்ற கனிமொழி, புன்னகாயல் கிளை தபால் நிலையத்தைத் துணை தபால் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். தொடர்ந்து உங்களோடு பணியாற்ற வாய்ப்பை தர வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்.
அண்ணாமலை பிரசார வாகனத்தை மறைத்த பெண்: பல்லடத்தில் பரபரப்பு!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் மீனவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நம்முடைய முதலமைச்சர் நிறைவேற்றித் தந்திருப்பதாகவும், ஒருவராக நின்று உங்கள் கோரிக்கைகள் எல்லாம் உணர்ந்து செயல்படக் கூடியவர் அனிதா ராதாகிருஷ்ணன் எனவும் கனிமொழி கருணாநிதி புகழாரம் சூடினார்.