தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார்.

இதனையடுத்து  தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  அப்போது, அவரைச் சூழ்ந்த அப்பகுதி மக்கள், ”ரோட்டுல நின்னு பார்த்தா எப்படி மழைநீர் தேங்கியது தெரியும்? தெருவுக்குள்ள வந்து பார்த்தாதானே எவ்வளவு தண்ணீர் கெட்டிக் கிடக்குதுன்னு தெரியும்.. வாங்கம்மா..” எனச் சொல்லி தெருவுக்குள் அழைத்துச் சென்றனர். எந்த யோசனையுமின்றி நடந்து சென்றார் கனிமொழி.

பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.