கோவில்பட்டியில் கோர விபத்து..! 2 மகன்களுடன் தாய் பரிதாப பலி..!
இரவு நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அதே காரில் அனைவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கோவில்பட்டி-இளையரசனேந்தல் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டிப்பர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அருகே இருக்கிறது அத்தைகொண்டான் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அழகு லட்சுமணன். இவரது மனைவி மனைவி சித்ரா (45). இந்த தம்பதியினருக்கு மகேந்திரன் (16), மாரிச்செல்வன் (13), நாகராஜன் (3) என 3 மகன்கள் இருந்தனர். லட்சுமணன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் மகேந்திரன் 11ம் வகுப்பும், மாரிச்செல்வன் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நாகேந்திரன் அங்கன்வாடி மையம் சென்று வந்துள்ளான்.
தற்போது கொரோனா பரவுதல் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மூவரும் பெற்றோருடன் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி கிராமத்தில் சித்ராவின் உறவினர் ஒருவரின் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தனது குழந்தைகளுடன் சித்ரா ஒரு காரில் சென்றுள்ளார். காரை லட்சுமணின் நண்பரான ரமேஷ்(25) என்பவர் ஓட்டிச் சென்றார். இவர் அப்பகுதியில் வட்டி பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்திருக்கிறார்.
இரவு நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அதே காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கோவில்பட்டி-இளையரசனேந்தல் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டிப்பர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கவே ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மற்ற அனைவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவலர்கள் சித்ரா மற்றும் அவரது மகன்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சித்ரா, மாரிச்செல்வன், நாகராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மருந்துவமனையில் உயிரிழந்தனர். மகேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.