திருச்செந்தூர் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவருக்கு கடல் சீற்றத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது. கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கடல் காவல் நிலையம் காவலர் இணைந்து அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலின் கடற்கரையில் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது. கடலில் நீராடிய ஒரு பக்தருக்கு திடீரென விபத்து ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் சத்தம் முழங்கியதால் அங்கிருந்த பக்தர்கள் பதட்டமடைந்தனர்.

மதுரையைச் சேர்ந்த 55 வயதான முருகன் என்பவர், உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்த திருச்செந்தூர் வந்திருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில், குடும்பத்தினருடன் கடலில் நீராடும் போது, பவுர்ணமி தினமாக இருந்ததால் கடல் சீற்றம் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் போது கடுமையான அலைகளின் வலுவான அழுத்தத்தில் முருகன் அவர்களின் கால் எலும்பு முறிந்து, வலியில் துடித்தார்.

வலி காரணமாக இயங்க முடியாத நிலையில், அவரை கடலுக்குள் இழுத்துச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் செந்தில் முருகன், வேலுச்சாமி, சர்வேஸ்வரன், மகாராஜன் மற்றும் கடல் காவல் நிலையம் காவலர் முத்துமாலை ஆகியோர் இணைந்து விரைவாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் முருகனுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர்கள், காயம் மிகக் கடுமையாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்புமாறு பரிந்துரைத்தனர். அதன்படி, ஆம்புலன்ஸ் மூலம் முருகன் விரைவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.