சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில், இந்தக் கோரமான சம்பவத்துக்கு எதிராக நாம் எல்லோரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அடுத்தடுத்து ஜெயராஜூம், பென்னிக்ஸும் மரணமடைந்தனர். போலீஸார் கடுமையாக தாக்கியதால் இருவரும் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தவண்ணம் உள்ளனர். போலீஸாருக்கு எதிராகவும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் நீதி வேண்டியும் சமூக ஊடங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானையும் இந்தச் சம்பவம் அசைத்துப் பார்த்துள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஷிகர் தவான் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்தக் கோரமான சம்பவத்துக்கு எதிராக நாம் எல்லோரும் குரல் எழுப்ப வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.