சாத்தான்குளத்தில் தந்தை - மகன் ஜெயராஜ், பெனிஸ் இறந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளது சிபிஐ.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்தது.


உயர் நீதிமன்றம் மதுரை கிளை இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு, இந்த விவகாரம் வேகம் பிடித்தது. நீதித்துறை நடுவர் பாரதிதாசனின் விசாரணையை அடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலீஸார் மீது கவனம் திரும்பியது. வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதை தீவிரமாக கண்காணித்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்தபடி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ குழுவினர்  டெல்லியிருந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். கடந்த 3 நாட்களாக ஜெயராஜ் வீடு, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, கோவில்பட்டி சிறைச்சாலை ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று சிபிஐ குழு விசாரணை நடத்தியது. இந்நிலையில் தந்தை - மகன் சந்தேக மரணம் எனப் பதிந்திருந்ததை, கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவுசெய்துள்ளது. சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்காக இந்த விவகாரம் மாற்றபட்டுள்ளது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.