திமுக இன்று ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறியுள்ளது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சனம் செய்துள்ளார். 

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நடிகர் விஜயின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த ‘பிகில்’ படம் ரூ. 400 கோடி வரை வசூல் செய்து உள்ளது. இதற்கு அவர்கள் வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளார். ஆகையால், நடிகர் விஜயின் சொத்துகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். 

மேலும், பேசுவது பஞ்ச் டயலாக்.. செய்வது வரி ஏய்ப்பு.. ஆனால், ரஜினி வருமான வரி ஏய்ப்பு செய்பவரல்ல. ரஜினி நேர்மையாக வருமான வரி செலுத்துபவர் என வருமான வரித்துறையால் சான்று வழங்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல் பல நிறுவனத்தினர் சினிமா படங்கள் எடுக்கும்போது இந்து சமய விரோத கருத்துகளை திணித்தும், நாட்டுக்கு விரோதமான கருத்துகள் கொண்ட படங்களையும் எடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அலை வீசுகிறது. பொது மக்கள், மாணவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் 4 பல்கலைக்கழகங்களில் மட்டும் செயற்கையான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது. திமுக ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி கொண்டு இருக்கிறது. அவர்கள் தற்போது தங்களின் தொண்டர்கள், 2-ம் கட்ட தலைவர்களை நம்புவதில்லை. திமுக இன்று ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறியுள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.