தூத்துக்குடியில் கார்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரின் உறவினர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் 2 காரில் பல்வேறு கோவில்களில் தரிசனத்திற்காக கடந்த 16-ம் தேதி ஒரு காரில் புறப்பட்டு சென்றனர். நேற்று மதுரையில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர்கள் ஆனந்த் மகன் வீரேந்திரன் (15), அவரது சகோதரி ரம்யா (20), ரம்யாவின் தோழி பார்கவி ஆகியோர் மற்றொரு காரில் சென்றனர். இவர்களது காரை ஓட்டுநர் ஜோசுவா (30) என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதி அருகே கார் வந்துக்கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த கனரக லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோர விபத்தின் காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.