தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். 

வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் இத்திருத்தலத்தில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா மிக முக்கியமானது. 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் இறுதி நாளில் சூரனை முருகன் வதம் செய்வதே சிகர நிகழ்ச்சியாகும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள்வார்கள். இந்த வருடத்திற்கான சஷ்டி திருவிழா கடந்த 28ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதுமுதல் திருக்கோவில் வளாகத்திலேயே தங்கி பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வந்தனர். தினமும் சுவாமி சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு இன்று (நவம்பர் 2)  நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். போருக்கு செல்வதற்கு முன் நடைபெறும் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை அடைந்த சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் அசுரனை வதம் செய்வதற்காக போருக்கு கிளம்பும் வைபவம் நடைபெற்றது. திருச்செந்தூர் கடலோரத்தில் முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறி வந்த சூரனை அழித்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறிய சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார். கடற்கரையோரத்தில் அலையோசைகளின் ஆர்ப்பரிப்பில் நடந்த இந்த சம்ஹார நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

இதன்பின்னர் தான் திருச்செந்தூரில் விநோத நிகழ்வு நடைபெறுகிறது. சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்த பின்னர், திருக்கோவில் பிரகாரத்தில் இருக்கும் மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளிகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. கோவில் அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் சுவாமி ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதையே சாயாபிஷேகம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். "சாயா' என்றால் "நிழல்' என்று பொருள். அசுரனை அழித்து போரில் வெற்றி பெற்ற ஜெயந்திநாதரை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகப்பெருமான் சன்னதிக்கு திரும்புகிறார். இதனுடன் சூரசம்ஹார வைபவம் நிறைவு பெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த மறுநாளில் முருகப்பெருமான் தெய்வானையை மணம் கொள்கிறார்.