இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து பிற காரியங்களுக்காக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு வெளிவர நேரங்களில் பாதுகாப்பாக முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது முக கவசத்தின் தேவை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பல்வேறு ஊர்களில் முக கவசம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முக கவசத்தை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் தற்போது பனை ஓலை மட்டையால் முக கவசம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் குளத்தூர் பகுதியில் பனை ஏறும் தொழிலாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். கோடைகாலத்தில் பதநீர், கருப்பட்டி ஆகியவற்றை தயாரிக்கும் தொழிலில் அவர்கள் ஈடுபடுவர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களும் வீடுகளிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை தீப விழா கொண்டாட்டம் ...

இதனிடையேஅப்பகுதியை சேர்ந்த சிலர் பனை ஓலையில் செய்யப்பட்ட முக கவசத்தை பனை ஓலை மட்டை நாரால் இணைத்து முகத்தில் அணிந்து பனை ஏறும் தொழிலுக்கு செல்கின்றனர். இதை அந்த ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் தயாரித்துள்ளார். அவரும் அவரது மனைவி முருக லட்சுமியும் பனை ஓலை முக கவசத்தை அணிந்து கொண்டு பதநீர் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழில் செய்கின்றனர்.மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக பனை ஓலை முகக்கவசத்தை தயார் செய்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பனை ஓலையில் செய்யப்பட்ட முககவசம் அணியும்போது குளிர்ச்சியாக இருப்பதாகவும் கொரோனா வைரஸ் போன்ற நச்சு கிருமியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.

முக கவச விலை தாறுமாறாக அதிகரித்திருக்கும் நிலையில் தமிழக கிராமம் ஒன்றில் பனை ஓலை கொண்டு தயார் செய்யப்பட்ட முக கவசம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.