Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத 5 மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்றே இல்லாத மாவட்டங்களில் ஒன்றாக தூத்துக்குடி திகழ்கிறது.
 

5 corona free districts in tamil nadu
Author
Chennai, First Published Apr 30, 2020, 9:11 PM IST

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கையில் 80-90% சென்னையை சேர்ந்தவர்கள் தான். 

நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 121 பேரில் 103 பேரும் பேரும் நேற்று கொரோனா உறுதியான 104 பேரில் 94 பேரும், இன்று கொரோனா உறுதியான 161ல் 138 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2323 ஆக உள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டுமே 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. 

சென்னையில் மட்டும்தான் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதுவும் சென்னையில் சமூக தொற்று ஆரம்பித்துவிட்டதால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கொங்கு மாவட்டங்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஈரோடு முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களும் மீண்டுவருகின்றன. 

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பே இல்லாத பச்சை மண்டலமாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் தாறுமாறாக எகிறிய ஈரோட்டில், மொத்தமாக 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், 69 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததால், ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது. அதைத்தொடர்ந்து நீலகிரியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 9 பேரும் குணமடைந்தனர். 

5 corona free districts in tamil nadu

இந்நிலையில், ஈரோடு, நீலகிரியை தொடர்ந்து கரூர் மாவட்டம் கொரோனாவிலிருந்து மீண்டது. கரூரில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 41 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனாவிலிருந்து மீண்ட மூன்றாவது மாவட்டமாக கரூர் உருவானது.

தூத்துக்குடியில் மொத்தமாக 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 25 பேர் குணமடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர். எனவே தற்போதைக்கு கொரோனா தொற்று ஒருவருக்குக்கூட தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லை என்பதால் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக தூத்துக்குடியும் உள்ளது. 

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று ஒருவருக்குக்கூட உறுதியாகாததால் கிருஷ்ணகிரி தொடர்ச்சியாக கொரோனா இல்லாத மாவட்டமாக நீடிக்கிறது. ஈரோடு, நீலகிரி, கரூர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தற்போதைக்கு பாதிப்பே இல்லாத மாவட்டங்களாக திகழ்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios