இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஐ எட்டியிருக்கிறது. தமிழகத்தில் 31 பேர் கொரோனாவிற்கு பலியாகியிருக்கும் நிலையில் 1,409 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 37 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி விளங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஈரோட்டில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. அங்கு தற்போது வரை 70 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றிருக்கும் நிலையில் 69 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த சில நாட்களாக அங்கு புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவாகியிருக்கிறது.

அதே போல நீலகிரி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நீலகிரி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் மரணமடைந்து விட 26 பேர் தீவிர சிகிச்சையில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக தூத்துக்குடியிலும் புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.