தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 23 கிலோ கடல் அட்டை பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்த வனத் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட காஜா மைதீன் என்பவரை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து தடை செய்யப்பட்ட அரிய வகை மருத்துவ குணம் கொண்ட கடல் அட்டை கடத்தப்படுவதாக மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பக வனச்சரகர் ஜெனோ பிளஸ்ஸில்க்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனவர் மதன்குமார் தலைமையில் வனக்காவளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், தூத்துக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையுடன் வந்த தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த காஜா மைதீன் என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காஜாமைதீன் இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு பைகளில் தடை செய்யப்பட்ட 23 கிலோ கடல் அட்டையை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காஜா மைதீனை கைது செய்த வனத்துறையினர், அவரிடம் இருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 23 கிலோ கடல் அட்டை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.விசாரணைக்கு பின் வனத்துறையினர் காஜாமைதீன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்