எனது குருநாதர் ராம் சுரத்குமார் போல எந்த நடிகரும் ஸ்டைலாக புகைபிடிக்க முடியாது. மேலும், தனது குருநாதர் புகைப்பிடித்தால் அருகில் நிற்கும் நாய் புகைவிடும் என்று நித்தியானந்தா கூறியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாகவே எப்பொழுதும் ஆன்லைனில் யாரேனும் ஒருவரால் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருப்பவர் நித்தியானந்தா. இவர் முதலில் பெரிய அளவில் பிரபலமாக இல்லாத போது செய்தி ஊடகம் ஒன்று இவர் நடிகை ஒருவருடன் தனிமையில் காம லீலையில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ அந்த காலகட்டத்தில் பெரும் வைரலாக பரவியது. இந்த வீடியோ பரவியபின்பு நித்தியானந்தா என்றால் தமிழ் நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நித்தியானந்தா பிரபலமானவர்.

சில ஆண்டுகளாக இருக்கிற இடம் தெரியாமல் அடக்கி வாசித்து வந்த நித்யானந்தா தற்போது மீண்டும் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில், அண்மை காலமாக சாமியார் நித்யானந்தா சொல்லும் விஷயங்கள் அவரது சிஷ்யர்களுக்கே அவர் சொல்லுவது உண்மையா பொய்யா என சந்தேகப்படும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தனது கட்டளையைக்கேட்டு சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்பது முதல் மேட்டூர் அணை நடுவே உள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன் என்றும், அந்த கோவிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் தான் இருப்பதாகவும் கூறினார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது குருநாதர் ராம் சுரத்குமார் போல எந்த நடிகரும் ஸ்டைலாக புகைபிடிக்க முடியாது என்று கூறியுள்ள நித்தியானந்தா, தனது குருநாதர் புகைப் பிடித்தால் அருகில் நிற்கும் நாய் புகைவிடும் என்று அளந்துவிட்டதுதான் உச்சக்கட்ட சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.