வேகத்தடையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் இரண்டாக உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் வேகத்தடையை கடக்க முயன்ற சிறிய கனரக வாகனம் இரண்டு துண்டாக உடைந்து சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை புறவழிச் சாலை அமைந்துள்ளது. இதில் தாராபுரம் ஆச்சியூர் பிரிவு அருகே புறவழிச் சாலையில் அடிக்கடி தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் (ஆர்.சி.சி எல்) தனியார் நிறுவனத்தினர் ஆச்சியூர் பகுதியில் புதிதாக வேகத்தடை அமைத்திருந்தனர். அதில் ஒரே இடத்தில் அடுக்கடுக்காக நான்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தடையில் கனரக வாகனங்கள் அதிக வேகத்துடனும் அல்லது வேகத்தடை மீது ஏறிச் செல்லும் பொழுதும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வந்தன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருந்து மதுரைக்கு காய்கறி ஏற்றிச் சென்ற மகேந்திரா பிக்கப் வாகனத்தை ஓட்டுநர் மஞ்சு என்பவர் ஓட்டி வந்தார். அப்போது இன்று இரவு 8:30 மணியளவில் ஓட்டுநர் வேகத்தடையை கடக்க முயன்ற போது வண்டியின் சேஸ் இரண்டு துண்டாக உடைந்து வேகத்தடை நடுவே நின்றது.
திருவாரூரில் நீதிமன்றத்தில் ஆஜரான நபரின் தலையை சிதைத்து கொடூர கொலை; மர்ம கும்பல் வெறிச்செயல்
இதனால் கோவை - திருப்பூர் - ஈரோடு பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் சாலையை கடக்க தாமதமானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாததால் வாகனம் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் வேகத்தடையில் பிக்கப் வாகனம் இரண்டு துண்டாக உடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே வேகத்தடையின் உயரத்தை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.