திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு; பொதுமக்கள் கொந்தளிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் வாகனம் மோதி 8 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய காவலரை பொதுமக்கள் சிறை பிடித்து சரமாரியாக தாக்கி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 19 வயதில் சஞ்சய் என்ற மகனும் 8 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். ஜெயராஜ் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சஞ்சய் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரக்கூடிய நிலையில் திவ்யதர்ஷினி விஜயாபுரம் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்குச் சென்ற திவ்யதர்ஷினியை வழக்கம்போல ராஜேஸ்வரி நேற்று மாலை அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது நல்லூர் காவல் நிலையம் அடுத்த நல்லிகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் ராஜேஸ்வரி வந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வேகமாக வந்த நல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திவ்யதர்சனியின் மீது காவல்துறை வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே திவ்யதர்ஷினி உயிர் இழந்தார்.
நூற்றாண்டு பாரம்பரியமிக்க மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ராஜேஸ்வரி காலில் படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் வாகனத்தை சிறைப்படுத்தினர். அப்போது காவல் வாகனத்தில் இருந்த ஊர் காவல் படையைச் சேர்ந்த காவலர் வீர சின்னன் மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர் வீர சின்னனை மீட்டு அருகில் உள்ள ஏடிஎம் அலுவலகத்தில் பாதுகாப்பாக அமர வைத்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு காரணமான காவலரை காவல்துறையினர் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறி பொதுமக்கள் திருப்பூர் காங்கேயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களின் மறியல் போராட்டம் தொடர்ந்ததன் காரணமாக திருப்பூர், காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் தரப்பில் காவலர் வீர சின்னன் மது போதையில் இருந்ததாகவும், அவர் மீது மது போதையில் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், முதல் தகவல் அறிக்கையை தங்களிடம் காண்பிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். பொதுமக்களிடம் பேசிய காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறுமியின் உடல் பிரேத பிரச்சனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.