தென்காசியில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து; 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் பால் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இவர் தனது விவசாய நிலத்தில் கிணறு அமைப்பதற்காக அதே பகுதியைச் சோந்த சக்திவேல் என்பரை அணுகி ஒப்பந்த அடிப்படையில் பணியை தொடங்கியுள்ளார். அதன்படி கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் சுழற்சி முறையில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், நேற்று பாறைகளை அகற்றுவதற்காக ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அப்போது அந்த வெடி மருந்து எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியுள்ளது. பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்தை அறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது அரவிந்த் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த 3 பேர் ஆலங்குளம் அரசு மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆசில் சாம்சன் என்ற தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அதன் பின்னர் படுகாயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
இந்தியாவில் நல்லது நடந்தால் இப்படித்தான் பேசுவாங்க: இடதுசாரிகள் பற்றி ராஜீவ் சந்திரசேகர் கிண்டல்
கிணறு அமைக்கும் பணியின்போது விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிமம் பெற்ற நபர்கள் மட்டுமே ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி பாறைகளை உடைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், சக்திவேல் தனது பணியாளர்களை பயன்படுத்தி இந்த குச்சிகளை வெடிக்கச் செய்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் நிலத்தின் உரிமையாளர் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், முதல்வர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.