வீரவநல்லூர் அருகே மாவுக்கடை வியாபாரி ராம்குமார், முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டார். அவரை தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு அழைத்துச் சென்ற கும்பல், அங்குள்ள விடுதியில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்தது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்காச்சாரி. இவரது மகன் ரங்கநாதன் என்ற ராம்குமார் (48). இவர் வீரவநல்லூர் பஜாரில் மாவு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். மேலும் சமையல் பாத்திரங்கள் வாடகை நிலையமும் வைத்துள்ளார். நேற்று கடையில் இருந்த ராம்குமாரை காரில் வந்த கும்பல் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் ராம்குமார் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கடைக்கு வந்து பார்த்தபோது சில மணி நேரங்களுக்கு முன்பே காரில் யாருடனோ ஏறி சென்றதாக அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராம்குமாரை கடத்தி சென்ற காரின் பதிவெண்ணை வைத்து அதன் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ராம்குமாரை புதுக்குடியில் வசிக்கும் சிக்கன் கடைக்காரர் உள்பட 3 பேர் கும்பல் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு அழைத்துச்சென்றதாகவும், குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதியில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.
இதனிடையே குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதி அருகே ராம்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வந்தது. தகவல் அறிந்து குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ராம்குமார் கடை வைத்திருக்கும் அதே பகுதியில் சிக்கன் கடை வைத்திருக்கும் கௌதம் என்ற வாலிபரை ராம்குமார் அடிக்கடி கிண்டல் செய்து பேசியதால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் குற்றாலத்திற்கு கடத்தி சென்ற கும்பல், அங்குள்ள பராசக்தி மகளிர் கல்லூரி அருகே ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருந்தது. பின்னர் மதுபோதையில் இருந்த அந்த கும்பல் ராம்குமாரை கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்தது.
பின்னர் அவரது உடலை அங்கேயே வீசிவிட்டு கும்பல் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை இரவோடு இரவாக கைது செய்தனர். அந்த கும்பல் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இன்று காலையில் போதை தெளிந்த நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


