தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தனது பேத்திக்கும் விஷத்தைக் கொடுத்துள்ளார். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் கிராமத்தில் ஒத்தவீடு பகுதியை வசித்து வருபவர் ரஞ்சித் (37). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.‌ இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், தருணிக்கா, லித்திகாஶ்ரீ என்ற மகள்களும் கேசவ பாண்டி என்ற மகனும் உள்ளனர். ரஞ்சித்துடன் அவருடைய அம்மா பஞ்சம்மாளும் ஒன்றாக தங்கி வசித்து வந்துள்ளார். ரஞ்சித் கடந்த 2024ம் ஆண்டு மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து கடன் தொகையை செலுத்தி வந்த அவர் கடந்த சில மாதங்களாக குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் தவணையை செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.

நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடி

இதனால் சம்பந்தமாக நிதி நிறுவன பணியாளர்கள் பணத்தை கட்டச் சொல்லி தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். நாளடைவில் நிதி நிறுவன பணியாளர்களின் நெருக்கடி அதிகரித்து, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித் வீட்டிற்கு நேரில் வந்த பணியாளர்கள் தவணைத் தொகையை செலுத்தவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது தவிர செல்போனில் தொடர்பு கொண்ட நிதி நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டல் விடும் வகையில் பேசியதாகவும் தெரிகிறது.

தற்கொலை முடிவுக்கு யார் காரணம்?

இதற்கிடையே அதே ஊரில் ரஞ்சித் அம்மா பஞ்சமாளுக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் நிதி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் ஒட்டியும், பெயிண்டால் இந்த சொத்து நிதி நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் எழுதியுள்ளனர். இதனால் மனமுடைந்த பஞ்சம்மாள் ரஞ்சித் மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று இருந்த போது, கடந்த மாதம் 31ம் தேதி விஷ மருந்தை குடித்துள்ளார். மேலும் விஷம் மருந்தை தன்னுடன் இருந்த பேத்தி தருணிகாவிற்கும் கொடுத்தாக கூறப்படுகிறது. எழுத படிக்க தெரியாத பஞ்சம்மாள் தனது பேத்தி தருணிகாவின் உதவியுடன் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து தனது இந்த முடிவிற்கு யார் காரணம் என்பது குறித்து வீட்டு சுவரில் எழுதி வைத்துள்ளார்.

நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு

சிலமணி நேரம் நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரஞ்சித், அம்மா மற்றும் தனது மகள் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பஞ்சம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சிறுமி தருணிகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித், ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவன ஊழியர்களான மாயாண்டி, கண்ணன், கார்த்திக் சேது, மற்றும் ஒரு ஊழியர் என மொத்தம் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிதி நிறுவன பணியாளர்கள் மிரட்டியதால் பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.