கடலுக்குள் முத்தெடுக்கும் குழுவை வைத்து தங்கத்தை கண்டுபிடித்த கவுன்சிலர்; நெல்லையில் நடந்த சுவாரசியம்
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி கன்னிமாரா ஓடையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது தவறவிட்ட தங்க மோதிரத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு கவுன்சிலர் கண்டுபிடித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிமாரா ஓடை அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையால் இந்த ஓடையில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனிடைய இங்கு குளிப்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து விட்டு செல்கின்றனர்.
திசையன் விளையைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்துக் கொண்டிருந்தார். மேலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவர் கையில் அணிந்திருந்த 1.5 சவரன் மோதிரம் ஓடையில் தவறி விழுந்துள்ளது. அவர் அதனை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு பிறகு இன்று கடலில் சிப்பி எடுக்கும் வீரர்கள் நான்கு பேரை அழைத்து மோதிரம் விழுந்த இடத்தில் இன்று தேடிப் பார்த்தனர். சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மோதிரம் கிடைத்த நிலையில் கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் மகிழ்ச்சி அடைந்தார்.