தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டியில் 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலை அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி அபகரித்து, பொதுமக்கள் வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Theni temple property misappropriation : தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டியில் ஊர் பொதுமக்கள் வழிபடும் 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஊஞ்சாம்பட்டி கிராமம் மற்றும் அன்னஞ்சி விலக்கு ஆகிய பகுதிகளில் இந்தக் கோவிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் வரி வசூல் செய்து கோவில் திருவிழாவை வெகு விமர்சையாக நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் பெரியகருப்பனின் நேர்முக உதவியாளராக இருந்த கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேனிக்கு வந்து இந்த கோவிலில் வந்து வழிபடத் தொடங்கினார். பின்னர் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்த அவர், இந்தக் கோவிலில் உள்ள காளியம்மன் தனது வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவதாக கூறி கோவிலுக்கு சில பணிகள் நன்கொடையாக செய்து கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த கோவில் தனக்கு சொந்தமானது எனக் கூறி பொதுமக்கள் வழிபாடு செய்யாமல் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சரின் மாஜி உதவியாளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

இக்கோவிலில் பொதுமக்கள் ஆடு,கோழி பலியிடாமல் வழிபட்டு வந்த நிலையில்,கோவிலின் ஆகம விதிகளை மீறி,கோவிலின் புனிதத்தை கெடுக்கும் விதத்தில் இந்த கோவிலில் ஆடு கோழி பலியிட்டு வருவதுடன், பொதுமக்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக சுற்றுச்சுவர் எழுப்பி தற்போது கோவிலின் கருவறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பூட்டி வைத்து பொதுமக்களை வழிபாடு செய்யாமல் தடுத்துவிட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவில் எதிர்புறத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வழிபாடு செய்வதை தடுக்க மாட்டேன் என போலீசாரிடம் தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி,நேற்று மீண்டும் கோவிலை பூட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்து மக்கள் கட்சி மாநில தொண்டர் அணி தலைவர் குரு.ஐயப்பன் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

அதில் கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி மீது நில அபகரிப்பு, மற்றும் பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மனு அளித்தனர். அமைச்சரின் முன்னாள் உதவியாளர் எனக் கூறி பொதுமக்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவிலை அபகரித்ததுடன்,பொது மக்களை அங்கு வழிபாடு செய்யாமல் தடுத்து வரும் சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.