- Home
- குற்றம்
- திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
தேனி மாவட்டம் தேவாரம் அருகே, திருமணமான மூன்று மாதங்களில் ஏற்பட்ட தகராறில், கணவர் பிரிந்து சென்ற மனைவியை சீர் பொருள் எடுக்க வந்த இடத்தில் வெட்டிக் கொலை செய்தார். தடுக்க வந்த மனைவியின் சகோதரரையும் கணவரின் தந்தை குத்திக் கொலை செய்துள்ளார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார்(52). இவரது மகன் பிரதீப் (27). இவருக்கும் சின்னமனூரை சேர்ந்த வழக்கறிஞர் நிகிலாவிற்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிகிலா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதீப்புடன் சேர்ந்து வாழ முடியாது நிகிலா திட்டவட்டமாக பஞ்சாயத்தில் கூறிவிட்டார். இந்நிலையில் நிகிலாவும் இவரது சகோதரர் விவேக் மற்றும் உறவினர்கள் முத்தையன் செட்டிபட்டிக்கு சென்று திருமண சீர் பொருட்களை எடுக்க வந்துள்ளதாக பிரதீப்பிடம் கூறியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பிரதீப் இவரது தந்தை சிவக்குமார் தரப்பிற்கும் நிகிலா மற்றும் விவேக் தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி நிகிலாவை சரமாரியாக வெட்டி உள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த நிகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன் கண் முன்னே சகோதரி உயிரிழந்ததை கண்ட விவேக் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பிரதீப்பின் தந்தை சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விவேக்கின் தலையில் சரமாரி குத்தி உள்ளார். விவேக்கும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலை செய்த பிரதீப் மற்றும் சிவகுமார் தலைமறைவான நிலையில் இருவரையும் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகிய இருவரும் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலை வழக்கில் சரணடைந்த மகன் மற்றும் தந்தை இருவருக்கும் நீதிபதி கமலநாதன் 24 மணி நேரமும் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் 24 மணி நேரம் கழித்து போடி நீதிமன்றத்தில் கொலை வழக்கில் சம்பந்தமுள்ள இரண்டு குற்றவாளிகளையும் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

