தமிழ்நாட்டில் 3103 வழித்தடங்களில் மினி பஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.

Mini Bus Service 0n 3103 Routes In Tamil Nadu: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(16.6.2025) தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மினி பஸ் சேவை

தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத (Un-Served) வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் (Served) 4 கி.மீ., என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்கப்பட்டு வந்தன.

புதிய விரிவான மினிபஸ் திட்டம்‍ 2024

இந்த அரசு பொறுப்பேற்றப்பின்னர், இத்திட்டத்தை விரிவாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்‍ 2024 கடந்த 23.01.2025 அன்று வெளியிடப்பட்டது. பின்னர், மீண்டும் அத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 28.4.2025 அன்று வெளியிடப்பட்டது.

புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை

புதிய விரிவான மினிபஸ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தூரத்தினை 25 கி.மீ. ஆக உயர்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்படி மினிபஸ்கள் பேருந்து நிறுத்தங்கள் / பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 3,103 வழித்தடங்கள்

அத்துடன் தற்போது மினி பஸ் இயக்கி வருபவர்கள் புதியத் திட்டத்திற்கு மாற்றம் (Migration) பெற்று இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 2094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்ட 1009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யார்? யார்?

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, கல்யாண சுந்தரம், முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.