- Home
- Tamil Nadu News
- எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது! ஆசிரியை கொலை! கைதானவர் சிறையில் விபரீத முடிவு! பதறிய போலீஸ்!
எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது! ஆசிரியை கொலை! கைதானவர் சிறையில் விபரீத முடிவு! பதறிய போலீஸ்!
பாபநாசம் அருகே 13 வருடங்களாக காதலித்த ஆசிரியை காவ்யாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் காதலன் அஜித்குமார் அவரை கொலை செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.

13 ஆண்டுகளாக காதல்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலகளக்குடியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் புண்ணியமூர்த்தி மகள் காவ்யா(26). ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார்(29). பெயின்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர் காவ்யாவும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காவ்யா வீட்டில் இவரது காதலுக்கு சம்மதிக்கவில்லை.
ஆத்திரத்தில் அஜித்குமார்
இதனால் காவ்யாவுக்கும், அவரது மாமா பையனுக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்து கடந்த 23ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை அஜித்குமாரிடம் தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து செல்போனில் காவ்யா பேசி வந்துள்ளார். இந்நிலையில் காவ்யா நிச்சயதார்த்தம் நடந்தது தொடர்பாக அஜித்குமாரிடம் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் போட்டோ மற்றும் வீடியோவை அஜித்குமாருக்கு காவ்யா அனுப்பியுள்ளார்.
காவ்யா குத்தி கொலை
இதனால் அஜித்குமார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை வழக்கம் போல் காவ்யா பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அஜித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது எனக்கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
தற்கொலை முயற்சி
இதையடுத்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி அஜித்குமார் சரணடைந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித்குமார் கைதி திடீரென தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

