டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் 13 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Water Release From Tamilnadu Kallanai Dam: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (15.6.2025) தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக முதல்வர் ஸ்டாலினால் 12.06.2025 அன்று மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்ததை தொடர்ந்து, கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்பட்டது.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தற்போது அனைத்து உப ஆறுகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. கல்லணையில், காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், வெண்ணாறு ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், கல்லணைக் கால்வாயிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து வினாடிக்கு 400 கனஅடி நீர்பங்கீடு செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக கிடைக்க உள்ள தண்ணீரை தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்படும்.

98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்

நடப்பாண்டில் (2025-2026) மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றிலுள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 98.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 5021.74 கி.மீ நீளத்திற்கு, திட்ட நிதியின் கீழ் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு பெற்றுள்ளது.

13 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

மேலும், கல்லணை தலைப்பில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய்களின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். கல்லணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யவும், சம்பா சாகுபடிக்கான தொடக்கப்பணிகளை செய்யவும், சுமார் 13.00 இலட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறவுள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீர்

மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை, மேலும் கர்நாடகாவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும். பாசனத்திற்கு வழங்கப்படும் நீரினை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெற விவசாயிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

டெல்டா மாவட்டங்களின் கலெக்டர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கல்லணை சுற்றுலா மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், மயிலாடுதுறை கலெக்டர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ், புதுக்கோட்டை கலெக்டர் அருணா ஆகியோருடன் டெல்டா பகுதிகளில் தூர்வாரப்பட்டதன் விவரங்கள் குறித்தும், சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

மேலும், தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும், விவசாய இடுபொருட்களான உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து, மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீரை திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவையும் அளித்தனர்.