சிவகங்கையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Youth Dies In Police Custody In Sivagangai: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சிவகாமி (76). இவரது மனைவி நிக்தா (41). இவர்கள் இருவரும் நேற்று சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை நிக்தா ஓட்டினார். கோயிலுக்கு சென்றதும் நிக்தா அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாரிடம் (28) தனது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறி சாவியை அவரிடம் கொடுத்துள்ளார்.

காரில் இருந்த நகையை காணவில்லை

அதற்கு தனக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கூறிய அஜித்குமார் வேறொருவரிடம் காரை ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார். பின்பு தரிசனம் முடிந்து வெளியே வந்த நிக்தா, அஜித்குமாரிடம் சாவியை வாங்கி காரில் ஏறியபோது அதில் வைத்திருந்த 9% பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிக்தா, இது தொடர்பாக காவலாளி அஜித்குமாரிடம் கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு

இதனைத் தொடர்ந்து நிக்தா நகை மாயமானது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் மடப்புரம் கோயிலுக்கு வந்து காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக ஒரு வேனில் அழைத்து சென்றார்கள். இதன்பிறகு மாலை 6 மணி அளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அஜித்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அஜித்குமாரின் உறவினர்கள் திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காவலர்கள் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

6 போலீசார் பணியிடை நீக்கம்

உயர் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில், அஜித்குமார் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையில் அதிகரித்துவரும் குரூரப் போக்கை காட்டுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் திரு. அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.

காவல்துறையின் குரூரப் போக்கு

கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.