சிவகங்கை அருகே இன்று ஜீவசமாதி அடைவதாகக் கூறியிருந்த சிவபக்தர் தனது முடிவை ஒத்தி வைத்துள்ளார். 
சிவகங்கை அருகே, பாசாங்கரை என்ற ஊரைச் சேர்ந்தவர் இருளப்பசாமி. 77 வயதான இவர், சிறு வயதிலிருந்தே தீவிர சிவபக்தர். சிவன் கோயில்களுக்கு நடந்தே செல்வது இவர் வழக்கம்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு , “செப்டம்பர் 12 நள்ளிரவு 12 மணி முதல் 13-ம் தேதி அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையபோவதாகவும். அதன் பிறகு அன்றே சமாதி எழுப்ப வேண்டும்” என்று அறிவித்தார். இதுதொடர்பாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
இதனையடுத்து இருளப்பசாமி ஜீமசமாதி அடையும் இடம் தேர்ர்வு செய்யப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்றுவந்தன. இதனை அறிந்த அக்கம்பக்கத்து ஊர் மக்கள் இருளப்பசாமியைக் காணக் கூடினார்கள் அவரிடம் மக்கள் ஆசி பெற்றார்கள். ஜீவசமாதி அடையும் இடத்தில் இருளப்பசாமி நேற்று முதல் தியானத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் இருளப்பசாமிக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டன. அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடந்தன. ஆனால், இன்று காலை 5.45 மணிக்கு ஜீவசமாதி அடையும் முடிவை இருளப்பசாமி ஒத்தி வைத்தார். சமாதி கட்டும் பணிகள் முழுமை அடையவில்லை என்பதால் முடிவை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இருளப்பசாமி ஜீவசமாதி அடைவது சட்டப்படி தவறு என்ற வாதமும் வைக்கப்பட்டுள்ளது.