சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக் காட்டூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்ந்த கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள பெருமாள் , பூதேவி, ஸ்ரீதேவி ஐம்பொன் சிலையை, தினமும் பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர்.

இதையொட்டி காலை மற்றும் மாலை வேளை களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இதைதொடர்ந்து நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும், அங்கிருந்த குருக்கள் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை வழக்கம்போல் கோயிலை திறக்க சென்றனர்.

அப்போது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ஐம்பொன்னாலான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை, நள்ளிரவில் கோயிலில் புகுந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கை ரேகை நிபுணர்கள், மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்து சென்றனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்ட பல்வேறு பழங்கால சிலைகள், தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. இதற்கான சிறப்பு அதிகாரியை நியமித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வேளையில் ஐம்பொன்சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.