அரசு போக்குவரத்து மேலாளர் மீது தாக்குதல்…! பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு..!
தனியார் பேருந்துகளை இயக்கும் நேரம் குறித்து விவாதித்தபோது பிரச்சினை எழுந்துள்ளது. இதில் மேலாளரை ஒரு சிலர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.
தனியார் பேருந்துகளை இயக்கும் நேரம் குறித்து விவாதித்தபோது பிரச்சினை எழுந்துள்ளது. இதில் மேலாளரை ஒரு சிலர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல கிளை மேலாளராக உள்ளவர் சண்முகம். நேற்று முன்தினம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று புறப்படும் நேரம் குறித்து பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது அங்கு சென்ற சண்முகம், தனியார் பேருந்து ஊழையர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில் போக்குவரத்து கழக மேலாளர் சண்முகத்தை, தனியார் பேருந்து ஊழியர்கள் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து கழக கிளை மேலாளர் புகார் அளித்தும் சம்மந்தப்பட்ட தனியார் பேருந்து ஊழியர்கள் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைதுசெய்யக்கோரி, இன்று காலையில் காரைக்குடியில் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கை எடுக்கப்படும் வரை பேருந்துகளையும் இயக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
காலை நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து காரைக்குடி வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்பாடு ஏற்பட்டதால் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்து பணிமனையில் இருந்து பேருந்துகள் புறபப்ட்டுச் சென்றன.