சூப்பர் நியூஸ்..! கொரோனாவை விரட்டியடித்து மாஸ் காட்டும் 2 மாவட்டங்கள்..!
நேற்று வெளியான அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சிவகங்கை, ஈரோடு ஆகிய 2 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது.
இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்றைய நிலவரப்படி 1,547 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய கிருஷ்ணகிரியில் 10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சிவகங்கை, ஈரோடு ஆகிய 2 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் உச்சத்தில் இருந்த ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனா தொற்று உறுதியாகி தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 69 பேர் குணமடைந்துவிட ஒருவர் பலியானார். கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக மாவட்டத்தில் புதிய பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறியுள்ளது. அதே போல சிவகங்கை மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அனைவரும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 10 நாட்களாக புதிய பாதிப்பு எதுவும் வரவில்லை. இதன்மூலம் சிவகங்கை மாவட்டமும் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது. எனினும் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.