சிவகாசி அருகே திருணமாகி 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் ஆத்திரத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சிவகாசி தேவி கிருபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (40). அச்சக தொழிலாளி. இவரது மனைவி வித்யா (35). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று இரவும் 2 பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வித்யாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது, தீயில் எரிந்த நிலையில் வித்யா இருந்தார். உடனே தீயை அணைத்த அக்கம்பக்கத்தினர் வித்யாவை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை வித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.