அலட்சியம் காட்டிய மின்வாரியம்..! அறுந்துகிடந்த மின்கம்பிகளை மிதித்து பலியான பசுமாடுகள்..!
சிவகங்கை அருகே சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை மிதித்து இரண்டு பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருக்கிறது கிளங்காட்டூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனி முருகன். விவசாயியான இவர் இரண்டு பசுமாடுகள் வைத்துள்ளார். தினமும் மாடுகளை வீட்டின் அருகே இருக்கும் நிலங்களில் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடுவது பழனிமுருகனின் வழக்கம். சம்பவத்தன்றும் மாடுகளை பழனி முருகன் மேய விட்டுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் மின் கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. அதை அறியாமல் மாடுகள் இரண்டும் மிதித்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அந்த வழியாக சென்றவர்கள் மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பழனி முருகனுக்கு தகவல் அளித்தனர். விரைந்த வந்த பழனிமுருகன் உயிரற்று கிடந்த தனது மாடுகளைப் பார்த்து கதறி துடித்தார்.
இதையடுத்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் ஊழியர்கள் வந்து சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது கிராமத்தின் பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான முறையில் அடிக்கடி அறுந்து விழுவதாகவும், மிகவும் தாழ்வாக மின்கம்பிகள் தொங்குவதாகவும் கூறினர். மின்வாரிய அலுவலகத்தில் சரிசெய்ய தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இரண்டு பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் கிளங்காட்டூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.