சேலத்தில் 500 பேருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாமக எம்எல்ஏ; போலீஸ் எச்சரிக்கை
சேலத்தில் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி பகுதியில் ரூபாய் 8 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடங்கணசாலை, இ.காட்டூர், கஞ்சமலையூர், சாத்தம்பாளையம், மெய்யனூர், தூதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக திரண்டனர். அவர்களை போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜூன் 2025ல் 2ம் உலகச் செம்மொழி மாநாடு - முதல்வர் அறிவிப்பு
பின்னர் இது குறித்து அவர்கள் கூறியதாவது, இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட இடங்கணசாலை செந்நேரி நீர் பிடிப்பு பகுதியில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளோம். எங்கள் பகுதியில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மேலும் குடிநீரின் தரம் வெகுவாக குறைந்துள்ளது. நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இடத்தின் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். ஆகவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதியில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என கூறினர்.