Asianet News TamilAsianet News Tamil

Isha mahashivratri | சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு!

கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Eshas Mahashivaratri festival live in Salem dee
Author
First Published Feb 10, 2024, 5:06 PM IST

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று (10-02-2024) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:

"கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 11 அன்று தர்மபுரி மாவட்டத்தை வந்தடைய இருக்கிறது. பின்னர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, காவேரிப்பட்டிணம் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பிப் 19 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. முன்னதாக, சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

இதோடு, சிவ யாத்திரை என்னும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். இந்த யாத்திரை பிப் 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.

இதை போலவே, தர்மபுரியில் பாரதி புரம், சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரபாய் திருமண மண்டபத்திலும், ஓசூரில் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios