சேலம்: ஏற்காடு மலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பலி.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..
ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து விபத்தில் தற்போது வரை 63 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஏற்காட்டுக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்றது. பின்னர் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணியளவில் சேலத்தை நோக்கி மீண்டும் வந்து கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்காடு மலையின் 11வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30km வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். பேருந்து விபத்தில் தற்போது வரை 63 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.