புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து இருக்கிறது அறையப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(75). இவரது மகன் ராஜாங்கம்(46). காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர், வாரச்சந்தைகளில் பணியாற்றி வந்துள்ளார். ராஜாங்கத்திற்கு திருமணமாகி 5 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்திருக்கிறது.மனைவி, இருமகள்கள் மற்றும் மகன் ஆகியோருடன் தனது தந்தை வீட்டில் ராஜாங்கம் வசித்து வந்துள்ளார். 

ராஜாங்கத்திற்கு நீண்டநாட்களாகவே வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் ராஜாங்கம் துடித்திருக்கிறார். இதனால் அவரை உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ராஜாங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜாங்கத்தின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

 

அப்போது மகனின் உடலை பார்த்து ராஜாங்கத்தின் தந்தை ஆறுமுகம் அழுதுள்ளார். தான் இருக்கும் போது மகன் பிணமாக கிடக்கிறானே என்று ஆறுமுகம் கதறி துடித்திருக்கிறார். அவரை அங்கிருந்தவர்கள் தேற்றி இருக்கின்றனர். எனினும் மகனின் சடலத்தை பார்த்து அழுதுபுலம்பிய ஆறுமுகம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளார். உடனடியாக மருத்துவரை சிகிச்சைக்காக அழைத்துள்ளனர். ஆறுமுகத்தை சோதனை செய்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடத்தியது நடனப்பள்ளி..! கொடுத்ததோ பாலியல் தொல்லை..! போக்சோவில் பரதநாட்டிய கலைஞர் அதிரடி கைது..!

அதைக்கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே ராஜாங்கம் இறந்த துக்கத்தில் இருந்த அவர்களுக்கு முதியவர் ஆறுமுகத்தின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரின் உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரே நேரத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல்முறையாக கால்நடைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை..! முதல்வர் எடப்பாடி அதிரடி..!