புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருக்கிறது குப்பகுடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(104). இவரது மனைவி பிச்சாயி(100). 80 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியாமல் வாழ்ந்து வரும் இந்த தம்பதியினருக்கு 5 மகன்களும் 1 மகளும் உள்ளனர். அவர்களின் வழியாக 23 பேரன்,பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் என பெரிய குடும்பமாக வாழ்ந்துள்ளனர்.

விவசாயியான வெற்றிவேல் உடல்நலத்துடன் இருந்தவரையிலும் உழைத்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக வெற்றிவேல் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார். அவரை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் கவனித்து வந்துள்ளனர். கணவர் வெற்றிவேல் மீது பிச்சாயி அதிக பாசத்துடன் இருந்துள்ளார்.

இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் இன்று காலை உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவியும் உறவினர்களும் கதறி அழுதனர். பின்னர் வெற்றிவேலின் மகன்கள், அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். கணவர் இறந்த துக்கத்தில் பிச்சாயி சோர்ந்து காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பிச்சாயி வீட்டிலேயே உயிரிழந்தார்.

அதைப்பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் துக்க வீட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்குகள் நடந்தது. நூறு வயதிலும் இணைபிரியாமல் வாழ்ந்து, ஒன்றாகவே மரணமடைந்த தம்பிதியினர் என்று அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு அவர்களை நினைவு கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: பச்சிளம் ஆண்குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தந்தை..! மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயல்..!