ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இருக்கிறது ராச்சர்லா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னபுள்ளையா. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராமதேவி என்கிற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு 8 மாதத்தில் ஆண்குழந்தை ஒன்று இருந்துள்ளது.

இந்தநிலையில் மனைவியின் நடத்தை மீது சின்னபுள்ளையா சந்தேகம் கண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. மனைவியை அவர் அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். நேற்றும் கணவன் மனைவியிடையே சண்டை நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சின்னபுள்ளையா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி இருக்கிறார். 

அப்போது 8 மாத குழந்தை அழுதிருக்கிறது. அதைக்கண்டு மேலும் ஆத்திரம் அடைந்த சின்னபுள்ளையா பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் தரையில் ஓங்கி அடித்திருக்கிறார். தலையில் பலத்த காயமடைந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அதற்குள்ளாக சின்னபுள்ளையா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள், குழந்தையை கொன்ற கொடூர தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். சின்னபுள்ளையா, முதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கோடரியால் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். அதன்பிறகே ராமதேவியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: அட்டகாசம் செய்யும் 'அரிசி ராஜா' காட்டுயானை..! மலைக் கோவிலில் தஞ்சமடைந்த கிராமவாசிகள்..!