தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்த இந்த வருடம் ஜனவரி 1  முதல் தடைவிதித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழகத்தில் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், இல்லங்கள் என அனைத்து இடங்களில் இருந்தும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் எடுத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வசதிக்காக 70 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

பொதுமக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்கி போகாமல் பல வருடங்களாக பூமியில் கிடப்பதால் மழை நீர் பூமிக்கு செல்வது தடைபடுகிறது.

மேலும் விலங்கு மற்றும் பறவை இனங்களுக்கும்  இதனால் அதிக பாதிப்பு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை அவை உண்பதால் அதில் வயிற்றில் சிக்கி பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு nadavadikaigal எடுத்து வருகின்றன. தன்னார்வ தொண்டர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டின்  கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.