- Home
- Tamil Nadu News
- நீலகிரி
- நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்றும், நாளையும் அங்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Heavy Rains In Nilgiris District
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று இரவு முதல் உதகை குந்தா, அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தாக்கம் தீவிரமடைந்து மிக கனமழை பெய்து வருகிறது.
நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை
இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் மின்சார துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நெலாக்கோட்டை அருகே மேபீல்டு என்ற இடத்தில் மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டு கூரை மீது விழுந்தது.
2 நாள் ஆரஞ்சு அலர்ட்
நீலகிரியில் அதிகப்பட்சமாக அவலாஞ்சியில் 292 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அப்பர் பவானி 168, பார்சன்சன்ஸ் வேலி 132, பந்தலூர் 130 மி.மீட்டர் பழை பதிவாகி உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள் மூடல்
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் உதகை படகு இல்லத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் மழை தொடரும்
தென்மாநில பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் , தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.