திமுக ஆட்சி தமிழகத்திற்கே ஒரு சாபக்கேடு; பிரசாரத்தின் போது மத்திய இணை அமைச்சர் காட்டம்
தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக குறிப்பிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக ஆட்சி தமிழகத்திற்கே ஒரு சாபக்கேடு என விமர்சித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இன்று நீலகிரி நாடாளுமன்ற பா. ஜ. க வேட்பாளரும், மத்திய இனை அமைச்சருமான எல். முருகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை எல். முருகன் துவங்கினார்.
மேடையில் அனல் பறக்க பேசி வாக்கு சேகரித்த எச்.ராஜா; அசதியில் தூங்கி விழுந்த வேட்பாளர்
இதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்தவாறு பிரச்சாரம் செய்த எல். முருகன், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தின் மூலம் ஏழைகளாக இருந்த 25 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி 25 கோடி மக்களை நடுத்தர வர்க்கமாக மாற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் வீடு, கேஸ் இணைப்பு வழங்கியதோடு அனைவருக்கும் குடி நீர் இணைப்பு பெற ஜல்ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் திமுக அரசு அதனை முறையாக கையாளாமல் மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை ஏற்படுத்தி மக்களை அவதிப்படுத்தி வருகிறது. மேலும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அப்போது எல்லாம் குடி நீர் பஞ்சம் தலைவரித்து ஆடுகிறது. திமுக ஆட்சி ஒரு சாபக்கேடு என விமர்சித்ததுடன், திமுக ஒரு ஊழல், லஞ்சம் அடங்கிய ஆட்சி என கடுமையாக விமர்சித்தார். மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியான பவானி ஆற்றினை மாசுபடுத்தி மக்கள் குடிநீரை மாசுபடுத்தி வருவதாக கூறினார்.