நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருமண நிகழ்வு நேற்று கோலாகலமாக நடந்து வந்தது. 

நாமக்கல்லில் இருக்கும் சோமேஸ்வரர் ஆலயத்தில் வைத்து நேற்று காலை கெட்டி, மேளங்கள் முழங்க மணமகள் ரேவதி கழுத்தில் மணமகன் விஜி தாலி கட்டினார். உறவினர்கள் மலர் தூவி ஆசி வழங்கினர். பின்னர் மணமகன், மணமகள் நெற்றியில் பொட்டு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது திடீரென விஜியின் கையை தட்டி விட்ட ரேவதி, அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். அருகில் நின்ற அர்ச்சகரையும் தாக்கியுள்ளார். இதனால் சுற்றி இருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்தனர்.

இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம், மணமகன் கட்டிய தாலியை கழற்றி ரேவதி வீசி எறிந்திருக்கிறார். இதனால் அங்கிருந்தவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அனைவரையும் வெளியேற்றி கோவில் நடையை அர்ச்சகர் சாத்தியிருக்கிறார். இதன்காரணமாக திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் கவலையோடு வெளியேறினர்.

பின்னர் இருவீட்டாரும் சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மணப்பெண் ரேவதிக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் தெரிய வந்தது. திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததும் பெற்றோர் வற்புறுத்தியதன் பேரில் திருமணம் நடைபெற்றதும் விசாரணையில் வெளிவந்தது.

இதையடுத்து மணமகன் விஜிக்கு வேறொரு உறவினரின் மகளுடன் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் கல்யாண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.