நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே இருக்கிறது கோக்கலை எளையாம்பாளையம் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜோதி(23). இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. தற்போது ஜோதியும் நந்தகுமாரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் பெரிய மணலியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் ஜோதி தங்கியிருந்தார். அவரது பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரோஜா ஆகியோர் கடந்த ஆறு மாதங்களாக கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். பெரிய மணலியில் தங்கி ஜோதி அங்குள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார்.

அதே இடத்தில் கோட்டப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் பிரியா (20) என்கிற இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்தார். ஜோதிக்கும் பிரியாவிற்கும் நட்பு ஏற்படவே இருவரும் நெருங்கி பழகினர். இணைபிரியாத தோழிகளாக மாறிய அவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும் அளவுக்கு நெருக்கமாக பழகி இருக்கின்றனர். இதனிடையே பிரியாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் 27ம் தேதி அவருக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் நடந்தால் தனது நெருங்கிய தோழியான ஜோதியை பிரிய கூடும் என வருந்திய பிரியா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அதுகுறித்து ஜோதியிடமும் கூறி வேதனை அடைந்திருக்கிறார்.

நேற்று காலையில் ஜோதி வீட்டிற்கு செல்வதாக தனது தாய் சுவேதாவிடம் கூறிவிட்டு பிரியா சென்றிருக்கிறார். பின் வெகு நேரமாகியும் வராததால் ஜோதியின் வீட்டிற்கு சுவேதா சென்றுள்ளார். அப்போது அங்கு பிரியாவும் ஜோதியும் ஒரே சேலையில் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தால் நெருங்கிய தோழிகள் பிரியக் கூடும் என்கிற வருத்தத்தில் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.