நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி..! நேரலையில் உரையாடி நெகிழவைத்த மோடி
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண் எடுத்து சாதித்த கனிகா என்ற நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் நேரலையில் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண் எடுத்து சாதித்த கனிகா என்ற நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் நேரலையில் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் உரை நிகழ்த்திவருகிறார். அந்தவகையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாமக்கல்லை சேர்ந்த கனிகா என்ற மாணவியை பாராட்டி பேசினார்.
நாமக்கல்லை சேர்ந்த எஸ்.கே.நடராஜன் என்பவர் லாரி ஓட்டுநர். தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த கனிகா, இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், இன்றைய தினம் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா, கார்கில் போர் வெற்றி தினம் ஆகியவை குறித்து பேசிவிட்டு, நாமக்கல் மாணவி கனிகாவை பாராட்டி பேசினார்.
அப்போது நேரலையில், அந்த மாணவியிடம் பேசிய பிரதமர் மோடி, அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவி கனிகாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
வணக்கம் கனிகா ஜி என்று மாணவியிடம் பேச தொடங்கிய பிரதமர் மோடி, அந்த மாணவிக்கு பிடித்த பாடம் எது என்று கேட்டறிந்தார். பொதுத்தேர்விற்கு தயாரான விதம், குடும்ப பின்னணி, லட்சியம் ஆகியவை குறித்து கேட்டறிந்ததுடன், லாரி ஓட்டுநராக இருந்தாலும், குழந்தைகளை நன்றாக படிக்கவைத்ததற்காக மாணவியின் தந்தைக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். நாமக்கல் என்றதும் தனக்கு ஆஞ்சநேயர் கோவிலின் நினைவுவருவதாகவும் அந்த மாணவியிடம் தெரிவித்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மாணவி, எனக்கு கணக்கு பாடமென்றால் மிகவும் பிடிக்கும். நான் 485 மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். தேர்வு நன்றாக எழுதியிருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட, அதிகமான மதிப்பெண் வந்தது. 490 மதிப்பெண் வாங்கியிருக்கிறேன் என்று கூறினார்.
உங்கள் லட்சியம் என்ன என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு பதிலளித்த மாணவி கனிகா, தனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று தனது கனவை தெரிவித்தார். உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் மருத்துவராக இருக்கிறார்களா என்று பிரதமர் கேட்டார். அதற்கு, தனது அக்காவும் மருத்துவம் படிப்பதாக தெரிவித்தார் கனிகா. அதன்பின்னர் தான், இரண்டு மகள்களையும் நன்றாக படிக்கவைத்ததற்காக, மாணவியின் தந்தையை பாராட்டினார் பிரதமர் மோடி.