நாமக்கல் அருகே சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இருக்கும் ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் தேவேந்திரன் (வயது 27). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று மதியம் இவருடைய செல்போனில் சார்ஜ் குறைவாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. இதனால் செல்போனை எடுத்து சார்ஜரில் இணைத்துள்ளார். பின்னர் அந்த தொலைபேசி அழைப்பில் பேச தொடங்கியிருக்கிறார்.

சில நொடிகள் பேசிக்கொண்டிருந்த தேவேந்திரன் மீது திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசியதால் மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மின்சாரம் தாக்கிய தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேவேந்திரன் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். அவர்கள் தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் சார்ஜ் செய்தபடி பேசியதால் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.