நாமக்கல் அருகே 11-ம் வகுப்பு மாணவியின் கருவை கலைக்க மாத்திரை வாங்கிக்கொடுத்த காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர் வசந்த் (21) அரசு கலைக் கல்லுாரி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பேருந்தில் செல்லும்போது பிளஸ் 1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தனிமையில் இருவரும் அடிக்கடி சந்தித்த போது எல்லை மீறியுள்ளனர். இந்நிலையில், கர்ப்பம் ஆனதால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே இதுதொடர்பாக காதலன் வசந்திடம் மாணவி கூற அவர் கருவை கலைப்பதற்காக மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். மாத்திரையை சாப்பிட்ட சில மணிநேரங்களிலேயே மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் கருக்கலைப்புக்காக மாத்திரை சாப்பிட்ட விவரம் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவர் வசந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மருத்துவர்களின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதால் கர்ப்பிணிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அதனால் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கும் மருந்துக் கடைகள் மீது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப்பட்டும் இதுபோல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.