அரசு பேருந்தில் பயணித்தபோது பெண் தவறி விழுந்ததையடுத்து, கதவுகளை மூடாமல் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு மெமோ வழங்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் அரசு பேருந்து ஒன்றில் பயணித்தார். உட்காருவதற்கு இடம் கிடைக்காததால், படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டு பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது, சர்வீஸ் சாலையில் பேருந்து வேகமாக திரும்பிய போது உள்ளே நின்றுகொண்டிருந்த கோகிலா தூக்கி வீசப்பட்டார். சுமார் 100 அடி தார்சாலையில் தேய்த்துக்கொண்டு சென்ற அவர் அருகிலிருந்த சாக்கடையில் விழுந்து படுகாயமடைந்தார்.

இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து போக்குவரத்துத்துறை சார்பில், அனைத்து பேருந்துகளிலும் கதவுகள் சரியாக மூடப்படுகிறதா என்பது குறித்து, அவ்வப்போது திடீர் ஆய்வு செய்யப்படுகிறது. மூடவில்லை என்றால் ஓட்டுனர், நடத்துனருக்கு மெமோ வழங்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த உத்தரவு மாநகர பேருந்துகளுக்கும் பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.