நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். 6 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். தினேஷ் பரமத்தி வேலூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கொந்தளம் பகுதியில் வாகன விபத்து ஏற்பட்ட சிலர் காயமடைந்ததாக தகவல் வந்திருக்கிறது. உடனே ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார் தினேஷ். கோபன்னாப்பாளையம் அருகே சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றிருக்கிறார். அப்போது எதிரே ஒரு டிராக்டர் வந்திருக்கிறது. எதிர்பாராத விதமாக டிராக்டரும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளன.

டிராக்டரில் மோதியதில் ஆம்புலன்சின் முன் பக்கம் அப்பளம் போல நொறுங்கியிருக்கிறது. இதில் ஓட்டுநர் தினேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள், தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்க சென்றபோது ஆம்புலன்ஸ் டிராக்டர் மீது மோதி அதன் ஓட்டுநர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.