நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி வசந்தி. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. சரவணன் பரமத்தி வேலூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு எருமப்பட்டி அடுத்து இருக்கும் தலைமலை கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அவருடன் அவரது மனைவி வசந்தி,  குழந்தை, தந்தை கேசவன், தாய் கண்ணம்மாள் மற்றும் அவரது நண்பர் ராஜேந்திரன் ஆகிய 6 பேரும் ஒரு காரில் சென்றுள்ளனர்.

தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் மாணிக்கவேலூர்  என்கிற பகுதியில் கார் வரும்போது நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் சரவணன் குடும்பத்தினர் பயணித்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வசந்தியை தவிர மற்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் வசந்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வசந்தியை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.