வேட்பாளருக்காக உறுதிமொழி எடுத்த ஆட்சியர்; வழிமொழிந்த சுயேட்சை - நாகையில் சுவாரசியம்
நாகப்பட்டினத்தில் மூக்கு கண்ணாடி எடுத்து வராததால் உறுதிமொழியை படிக்க முடியாமல் திணறிய சுயேட்சை வேட்பாளருக்காக தேர்தல் அலுவலரே உறுதிமொழியை படித்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் மாவட்ட வாரியாக வேட்புமனு தாக்கல் சூடு பிடித்துள்ளது. அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ் வேட்புமனுவை பெற்றுக் கொண்டார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் வேட்பாளரை உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க சொல்ல, வேட்பாளர் தயங்கி நின்றார்.
கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பல்; விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த உண்மைகள்
உடனே வேட்பாளர் உடன் வந்த நபர் சார் ஒரு வேண்டுகோள் சார் என கூறி, வேட்பாளர் மூக்கு கண்ணாடியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அவருக்கு பதில் நான் படிக்கவா என கேட்க, தேர்தல் அதிகாரி ஜானி டாம் வர்கீஸ் நான் படிக்கிறேன். அவரை வாங்கி படிக்க சொல்லுங்கள் என கூறி வேட்பாளரிடம் ஆண்டவன் ஆணையாக கூறுகீர்களா, இல்லை உளமாற கூறுகிறீர்களா என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் உறுதி மொழியை படிக்க, வேட்பாளர் அதை பின் தொடர்ந்து சொல்லி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். வேட்புமனுவின் போது சுயேட்சை வேட்பாளர் கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டதாக கூறியது வேடிக்கையாக இருந்தது மட்டுமில்லாமல் அவருக்கு பதிலாக தேர்தல் நடத்தும் அதிகாரியே உறுதிமொழியை வாசித்தது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.